ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

பிப்ரவரி பதினாறாம் தேதி செய்தி புகைப்படங்கள்



முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயக்குமாரின் மகன்களுடைய திருமணம், சென்னையில் நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.



சென்னை: ""கட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு வர விரும்பும் இளைஞர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்; கட்சிப் பதவி பெறுவது, இன்ஸ்டன்ட் காபி கலப்பது போல் அல்ல,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயக்குமாரின் மகன்களுடைய திருமணம், சென்னையில் நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. பன்னீர்செல்வம் வரவேற்றார். பாலகங்கா தொகுத்து வழங்கினார். பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மணமக்களை வாழ்த்தி ஜெயலலிதா பேசியதாவது:பன்னீர்செல்வம், ஜெயக்குமாரின் கடந்த கால வாழ்க்கையை உற்று பார்த்தால் பல படிப்பினை கிடைக்கும்.



இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிற்கும் அவசரப்படுகின்றனர். கட்சியில் சேர்ந்தவுடனே பெயரும், புகழும், செல்வமும் வரவேண்டும் என நினைக்கின்றனர். எம்.எல்.ஏ - எம்.பி., அமைச்சர் பதவி பெற வேண்டும் என ஆசைப்படுகின்றனர். கட்சியில் சேருவதும், அதில் வளர்வதும் இன்ஸ்டன்ட் காபியைக் கலப்பது போல் அல்ல.இருவரும் கட்சியின் மீதுள்ள பற்று காரணமாக உயர்ந்துள்ளனர். ஒரு காலக்கட்டத்தில் பன்னீர்செல்வம், முதல்வரானார். நம்முடைய வரலாற்றில் இவ்வாறு ஒரே ஒரு சம்பவம் தான் உள்ளது. ஒருவருக்கு முதல்வர் பதவியை வழங்கி விட்டு, பின் உரியவருக்கே அந்த முதல்வர் பதவி திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை.இதற்கு இணையாக இன்னொரு சம்பவத்தை ராமாயணத்தில் தான் சொல்ல முடியும். ராமர் வனவாசம் சென்றபோது அந்த அரியணையில் அவரால் அமர முடியவில்லை. அப்போது ராஜ்யம் பரதனிடம் கொடுக்கப்பட்டது. வனவாசம் முடித்து ராமர் அயோத்திக்கு திரும்பி வந்ததும் அந்த ராஜ்யத்தையும், அரியாசனத்தையும் ராமரிடம் ஒப்படைத்தார்.



அந்த புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் பன்னீர் செல்வம். தொகுதிக்காக விண்ணப்பங்கள் கொடுத்திருந்த சிலரை பேட்டி கண்டேன். அவர்களில் பல இளைஞர்கள், சீக்கிரம் வளர்ச்சி அடைய முடியவில்லையே என வருத்தப்பட்டனர். ஒரு இளைஞர், "நான் லாரி கிளீனராக இருந்தேன். பின் டிரைவராக மாறினேன். இன்றைக்கு 10 லாரிகளை சொந்தமாக இயக் கிக் கொண்டிருக்கிறேன். நான் உடனே எம்.எல்.ஏ - எம்.பி.,யாக வேண்டும்' என்றார்."நீங்கள் எப்போது கட்சியில் இணைந்தீர்கள்' என்று கேட்டேன். "2007ல்' என்றார். கட்சிக்கு அவர் வந்து ஒன்றரை ஆண்டு தான் ஆகிறது. இந்தக் கட்சி துவக்கப்பட்ட ஆண்டில் இருந்து இன்று வரை பாடுபட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ தொண்டர்களுக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. ஆகவே பொறுமையாக இருந்து அதை சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.இன்னும் சில இளைஞர்கள், "கட்சியில் இருக்கிற மூத்தவர்கள், எங்களை வளரவே விடுவதில்லை' என்கின்றனர். பெரிய கட்சி என்றால் அப்படித்தான் இருக்கும். எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை.



போராடி, போராடி உயர முடியும்: என் கையை பிடித்துக்கொண்டு வந்து கட்சியில் எம்.ஜி.ஆர்., சேர்த்தார். அதன் பிறகு எத்தனை போட்டிகள், எத்தனை பொறாமைகள் என்பது உங்களுக்கு தெரியும்.பெரிய பூஜாரிகள்: ஒரு பக்கம் ஆர்.எம்.வீரப்பன், ஒரு பக்கம் எஸ்.டி.எஸ்., இன்னும் எத்தனையோ பேர். அன்றைய தினத்தில் இருந்த பெரிய பூஜாரிகள் அவர்கள் தான். தெய்வமே கொண்டு வந்து என்னை கட்சியில் இறக்கினாலும், இந்த இரண்டு பூஜாரிகளும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.எனக்கு முன்னால் கட்சியில் இருந்த மூத்தவர்கள் யாருக்குமே என்னுடைய வருகை பிடிக்கவில்லை. போராடி, போராடி எதிர்ப்புகளை எதிர்கொண் டேன். ஒரு பெண்ணான என்னால் போராடி கட்சியில் உயர முடியும் என்றால், உங்களால் முடியாதா? முடியாது என்பது எதுவுமே கிடையாது."வாழ்க்கை எளிதாக இருக்கும்; நமது பாதை மலர் தூவிய பாதையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது தான் தவறு. வாழ்க்கை அப்படி அமைவதில்லை. அழகிரியாக இருந்தால், கனிமொழியாகப் பிறந்தால் பாதை எளிதாக இருக்கும்.இந்த மாநிலத்தில் இருள் சூழ்ந்துள்ளது. ஒரு மக்கள் விரோத ஆட்சி இன்று அதிகாரம் செய்துகொண்டிருக்கிறது.



மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மக்கள் அன்றாட வாழ்க்கையை சந்திக்க முடியாமல் சமாளிக்க முடியாமல் துன்பப்படுகின்றனர்.நாம் அனைவரும் ஒரு போருக்கு நம்மை தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, இந்த மக்கள் விரோத தி.மு.க., அரசை தூக்கி எறிய வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார். ஜெயக்குமார் நன்றி கூறினார்.



தமிழகத்தில் புதிய கட்சி : கொங்குநாடு முன்னேற்ற பேரவை உதயம்






திருப்பூர்: கோவையில் நடந்த கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாட்டில், கொங்குநாடு முன்னேற்ற பேரவை என்ற கட்சி முறைப்படி துவக்கப்பட்டது; பச்சை மற்றும் மஞ்சள், சிவப்பு நிற கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.கொங்கு வேளாள கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாடு, கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியில் கோலாகலமாக துவங்கியது. பின், தீரன் சின்னமலை கடவுளாக அறிவிக்கப்பட்டு, கண் திறக்கும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், பரமத்தி, வேலூர், சங்ககிரி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் கொங்கு இன மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களின் கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்ல, வலுவான அமைப்பு தேவை என்ற கோஷத்துடன் கொங்கு வேளாள கவுண்டர் பேரவை, தன்னுடைய அரசியல் பிரவேசத்தை ஆரம் பித்துள்ளது.பேரவையின் முதல் அரசியல் எழுச்சி மாநாடு, கருமத்தம் பட்டியில் அதிகாலை யாக பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது.



"கமோண்டோ' படை அணிவகுப்பு: கோவை மணிவாசகர் அருள் பணி மன்றம் குமரலிங்கேஸ்வரர் குருக்கள் தலைமையில், திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் பாடி, தமிழ் முறைப் படி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, சின்னமலை கவுண்டருக்கு என கோஷமிட்டனர்.பச்சை நிற சேலை, சிவப்பு நிற பார்டர் கொண்ட சேலை அணிந்த மகளிரணியினர், ரோட்டின் இருபுறமும் கைகளில் பூக்கள் ஏந்தி நின்று, அனைவரையும் வரவேற்றனர். காளிபாளையத்தில் இருந்து முளைப்பாரி கொண்டு வந்திருஞூதனர்.மேள தாளம், செண்டை மேளம் முழங்க 108 குடங்களில் தீர்த்தங்கள் கொண்டு வரப் பட்டன. காலை 7.05 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், கொங்கு இன மக்களின் கடவுளாக தீரன் சின்னமலை அறிவிக்கப் பட்டார்.முன்னதாக, காலை 6.00 மணிக்கு "கமோண்டோ' படை அணிவகுப்பு, மாநாட்டுக்குழு தலைவர் நாகராஜ் ஏற்றார். பின், இரண்டு வெள்ளை நிற குதிரைகளில் பொன்னர் - சங்கர் வேடமணிந்த இருவர் அழைத்து வரப் பட்டனர். குதிரையில் அமர்ந்திருந்த அவர்களுக்கு முன், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதன் பின், மாநாட்டுக்குழுவினருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாநாட்டு முகப்பில் கம்பீரமான தீரன் சின்னமலையின் உருவச்சிலையை பார்த்த இளைஞர்கள் உற்சாகத்தில் கோஷங்கள் எழுப்பினர். இன எழுச்சி, இன ஒற்றுமை குறித்த கோஷங்கள் உச்சஸ்தாயில் ஒலித்தது.காலை 9.00 மணிக்கு தொழில் கண்காட்சியை பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்து வைத்தார். 9.40 மணிக்கு குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சியுடன், கடவுள் வாழ்த்து பாடப் பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதலாவதாக, வரவேற்பு நடனம் நடந்தது. கொங்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர் களை அசத்தும் வண்ணம் தொடர்ந்தது.



ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் செயல்படுத்த கொங்கு பேரவை மாநாட்டில் தீர்மானம்



கருமத்தம்பட்டி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்த வேண்டும், வன்கொடுமை தடுப்பு, கொத்தடிமைத் தடுப்பு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்; இச்சட்டங்களை தவறாக பயன்படுத்துவது தடுக்க வேண்டும்' என, கொங்கு பேரவை அரசியல் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொங்கு வேளாள கவுண்டர் பேரவை அரசியல் எழுச்சி மாநாடு, கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியில் கோலாகலமாக துவங்கியது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : * கொங்கு வேளாளர் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்லூரிகள், அரசு வேலைவாய்ப்பு, நீதிபதி, துணைவேந்தர், தேர்வாணைக் குழுக்களில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* வன்கொடுமை தடுப்பு சட்டம், கொத்தடிமைத் தடுப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்; இச்சட்டம் தவறாக பயன்படுத்துவது தடுக்க வேண்டும். சமுதாய பிரதிநிதிகள் கொண்ட விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.* முன்னோரால் அமைக்கப்பட்ட பரம்பரை கோவில்கள், பிற கோவில்களில் இருந்து வேறுபட்டவை; இவற்றை அரசுடமையாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இதுவரை அரசுடமையாக்கப்பட்ட கோவில்கள் மற்றும் சொத்துக்களை திருப்பித் தர வேண்டும். தீரன் சின்னமலை பிறந்த நாளான ஏப்., 17ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அவர் தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* பல்லாயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்டு வரும் பொன்னர் - சங்கர் குலதெய்வ கோவில் உள்ள வீரப்பூர் வளாகத்தை, எங்கள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்.
* தீரன் சின்னமலை பிறந்த நாளான ஏப்., 17ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அவர் தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும்.
* திருமணி முத்தாறு, காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளின் குறுக்கில் தடுப்பணை கட்டி வாய்க்கால் அமைத்து, வீணாகும் உபரிநீரை சேமிக்க வேண்டும்.
* அவிநாசி - அத்திக்கடவு திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதே போல், கிருஷ்ணகிரி மாவட்ட கிழக்கு பகுதி விவசாயிகள் நலன் கருதி பாரூர் ஏரியில் இருந்து போச்சம்பள்ளி, மத்தூர், கல்லாவி, ஊத்தங்கரை, அனுமன் தீர்த்தம், பெண்ணையாறு வரையிலான ஏரிகளை ஒன்றிணைத்து புதிய கால்வாய் திட்டம், ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
* விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணயம்; நஷ்டம் ஏற்பட்டால் மானியம் வழங்க வேண்டும். காய்கறிகளை சேமிக்க, மாவட்டம் தோறும் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.
* மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் விவசாயத்துக்கு தனி நிதி ஒதுக்க வேண்டும். தென்னை விவசாயிகளை காக்க "கள்' இறக்க அனுமதிக்க வேண்டும்.
* கரும்புக்கு டன்னுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும். பாலுக்கு லிட்டருக்கு 20 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும்.
* ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம், திருச்செங்கோடு, கரூர், பல்லடம், ஆத்தூர், ஒசூர் பகுதிகளில் "ரிங்' ரோடு அமைக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாரிசுகளுக்கு கல்லூரியில், தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* 25 ஆண்டுகள் உழைத்த 60 வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இலவச பயிர்க்காப்பீடு மற்றும் உயிர்க்காப்பீடு வழங்க வேண்டும்.
* சாயக்கழிவு நீர் நொய்யலில் கலக்காமல் சுத்திகரிப்பு செய்து குழாய்கள் மூலம் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
* ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* கரூர் - திண்டுக்கல் பகுதியில் அதிகம் விளையும் முருங்கை, கோவை மண்டலத்தில் அதிகம் விளையும் கிழங்குகளை பாதுகாக்க குளிர்பதன வசதி செய்ய வேண்டும்.
* இலங்கையில், அப்பாவி தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.



கொங்குநாடு முன்னேற்ற பேரவை உதயம்; கட்சிக்கொடி அறிமுகம்



கொங்குநாடு முன்னேற்ற பேரவை என்ற கட்சி முறைப்படி துவக்கப்பட்டது; பச்சை மற்றும் மஞ்சள், சிவப்பு நிற கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. பேரவை நிர்வாகிகளுக்கு வீரவாள் வழங்கப்பட்டதும், மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.விழாவின் முத்தாய்ப்பாக நிகழ்ச்சியாக, அரசியல் பிரவேசம் அறிவிப்பு பொதுக்கூட்ட நிகழ்ச்சி, மாலையில் நடந்தது. அப்போது, கொங்கு இன மக்களின் கட்சியாக "கொங்குநாடு முன்னேற்ற பேரவை' துவக்கப்பட்டது; அக்கட்சிக்கொடி, மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பச்சை நிறம் மற்றும் மஞ்சள், சிவப்பு நிற கொடியை, பேரவை நிர்வாகிகள் "பெஸ்ட்' ராமசாமி, ஈஸ்வரன் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, கொங்கு இன மக்கள் ஆரவாரம் செய்தனர்.""கொடியில் குறிப்பிட்டுள்ள பச்சை நிறம் பசுமையை குறிக்கும்; மஞ்சள் நிறம் மங்கலத்தையும், சிவப்பு நிறம் புரட்சியையும் குறிக்கும்,'' என பொதுச் செயலர் ஈஸ்வரன் தெரிவித்தார்.இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.



முதல் கட்டமாக, தலைவர் மற்றும் பொது செயலர் மட்டும் அறிவிக்கப்பட்டனர். தலைவராக "பெஸ்ட்' ராமசாமி, பொது செயலராக ஈஸ்வரன் அறிவிக்கப்பட்டு, ரோஜாப்பூ மாலை, மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. "பெஸ்ட்' ராமசாமிக்கு செங்கோலும், ஈஸ்வரனுக்கு வீரவாளும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை நேரடியாகவும், "டிவி' வாயிலாகவும் பார்த்த கொங்கு இன மக்கள் ஆர்ப்பரித்தனர். இதன்பின், கட்சி நிர்வாகிகள் அரசியல் எழுச்சி உரை நிகழ்த்தினர்.


பட்டாயா ஓபன் டென்னிஸ்: பைனலில் சானியா தோல்வி





பட்டாயா : பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் ஸ்வொனரேவாவிடம் தோல்வியடைந்து கோப்பையை கோட்டைவிட்டார். முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடர் தாய்லாந்தில் நடந்தது.

இதில் நேற்று நடந்த ஒற்றையர் பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் ஸ்வொனரேவாவை சந்தித்தார். பரபரப்பான பைனலில் முதல் செட்டை சானியா 5-7 என போராடி கோட்டைவிட்டார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் அசத்திய ஸ்வொனரேவா 6-1 என எளிதாக கைப்பற்றினார். இறுதியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 5-7, 1-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டார்.

இதுவரை டபிள்யு.டி.ஏ., தொடர்களில் ஒற்றையர் பிரிவில் நான்கு முறை பைனலுக்கு முன்னேறிய சானியா, கடந்த 2005ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த ஐதராபாத் ஓபன் டென்னிஸ் தொடரில் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இரட்டையர் பிரிவில் ஏழு முறை பட்டம் வென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: